கடலாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தூய்மை பாரத இயக்க சார்பில் விழிப்புணர்வு முகாம்


இந்திய மக்கள் தொடர்பு கள அலுவலகம் மற்றும் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில் தூய்மை பாரத இயக்க சிறப்பு விழிப்புணர்வு முகாம்
இந்திய மக்கள் தொடர்பு கள அலுவலகம் மற்றும் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில் இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தூய்மை பாரத இயக்க சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. 
விழிப்புணர்வு ஊர்வலத்தை வட்டார மருத்துவ அலுவர் மு.யாசர்அராபத் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக கல்லூரியை அடைந்தது. இந்த ஊர்வலத்தில் ஏராளமான கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். பின்னர் நடைபெற்ற சிறப்பு விழிப்புணர்வு முகாமில் களவிளம்பர உதவி அலுவலர் மு.ஜெயகணேஷ் வரவேற்புரையாற்றினார், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மற்றும் தூய்மை பாரதம்; பற்றி கல்லூரி மாணவிகளிடம் எடுத்துரைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் இரா.சிவகுமார்  தலைமை வகித்தார். கொரோனா தடுப்பு பற்றி வட்டார மருத்துவ அலுவலர் மு.யாசர் அராபத் கூறும்போது கொரோனா வைரசில் இருந்து நம்மை காத்து கொள்ள மற்றவர்களுக்கு கை கொடுக்க வேண்டாம் என்றும், அடிக்கடி கைகளை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்  என்றும், இருமல், மற்றும் தும்மலின் போது வாய், மற்றும் மூக்கை  கைகுட்டையால் மூடிக்கொள்ள வேண்டும் என்றும்  மற்றவரிடம் பேசும்போது ஒரு மீட்டர் இடைவெளியில் நின்று பேச வேண்டும் என்றும்  இதன் மூலம் கொரோனா வில் இருந்து நம்மை பாது காத்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். இந்திய அஞ்சல் துறையின் முதுநிலை மேலாளர்  எம். முருகேசன் பெண்களுக்காக அஞ்சல் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார். 
 நிகழ்ச்சியின் இடையில் இசை நாடக சார்பாக விழிப்புணர்வு கலை நிகழ்சிகள் மற்றும் நாம் எப்படி கை கழுவ வேண்டும் என்று செயல்முறை விளக்கம்  தரப்பட்டது. இவ்விழாவில் பேராசிரியர் விமலா,பேராசிரியர் அன்னதாசன் மற்றும் அனைத்து கல்லூரி மாணவ  மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.